விருதுநகரில், நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை தகர்த்து சல்லிக்கட்டு நடத்தினர்.

உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டு குறித்து உங்கள் அவசரத்திற்கு எல்லாம் தடையை நீக்க முடியாது என்றும், சல்லிக்கட்டு நடத்த இடைக்கால உத்தரவு விதிக்க முடியாது என்றும் கூறியது.

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அந்த நாட்டு மக்களும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டங்கள் வலுக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை உடைத்து சல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர், திருவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை தகர்த்து சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காளைக் கட்டித் தழுவினர்.

இதற்கு முன்பு, நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சல்லிக்கட்டில் ஈடுபட்டவர்களை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.