Kallakurichi | கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிச்சுமை காரணமாக பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சினர்தங்கள் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜாகிதா பேகம். இவர் கடந்த சில தினங்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சுமார் 800 விண்ணப்பங்கள் கணினி வாயிலாக அப்டேட் செய்ய வேண்டிய நிலையில், ஜாகிதா பேகம் 80 விண்ணப்பங்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.

வாக்காளர் சிறப்பு திருத்த தீவிரப் பணி நிறைவடைய இன்னும் நாட்களே உள்ள நிலையில் பணியை விரைவு படுத்தக் கோரி தேர்தல் ஆணைய அதிகாரிகள், சில அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தேர்தல் பணியை மேற்கொ்ணட நாள் முதலே ஜாகிதா பேகம் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பணிச்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் விபரீத முடிவெடுத்த பேகம் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேகத்தின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள், இனி யாரிடம் முறையிட்ட என்ன பயன்? இப்போது இரண்டு குழந்தைகளுடன் நான் அனாதையாக இருப்பதாகக் கூறி அவரது கணவர் வேதனை தெரிவித்துள்ளார்.

BLOவின் தற்கொலையால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.