மேற்கு வங்கத்தில் SIR பணிச்சுமை காரணமாக சாந்தி முனி எக்கா என்ற பூத் நிலை அதிகாரி தற்கொலை செய்துகொண்டார். இது 10 நாட்களில் நடந்த இரண்டாவது மரணம் ஆகும். தேர்தல் ஆணையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான பணிச்சுமை தாங்க முடியாமல், மற்றொரு பூத் நிலை அதிகாரி (BLO) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கிராமின் ரங்காமதி பஞ்சாயத்தைச் சேர்ந்த சாந்தி முனி எக்கா என்ற பெண் BLO அதிகாரி, புதன்கிழமை அன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்கொலைக்குக் காரணம் என்ன?
சாந்தி முனி எக்கா ஒரு அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்தவர். அவர் கிராமப்புறப் பகுதியில் BLO ஆக நியமிக்கப்பட்டிருந்தார். வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவங்களை விநியோகிப்பது மற்றும் சேகரிப்பது போன்ற கடுமையான பணிச்சுமையை அவரால் தாங்க முடியவில்லை என்றும், SIR பணி தாங்க முடியாத மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால் அவர் மனச்சோர்வில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனம்
சாந்தி முனி எக்காவின் மரணச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மால், ஜல்பைகுரியில் உள்ள பூத் நிலை அதிகாரி, பழங்குடிப் பெண்மணி திருமதி. சாந்தி முனி எக்காவை இன்று இழந்துவிட்டோம். நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். SIR தொடங்கியதிலிருந்து இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"திட்டமிடப்படாத, ஓயாத பணிச்சுமை காரணமாக விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரடுகிறது. இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தான் காரணம். முன்பு மூன்று ஆண்டுகள் எடுத்த ஒரு பணியை, இப்போது அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இரண்டு மாதங்களுக்குள் முடிக்க சொல்கிறார்கள். மனிதத்தன்மை இல்லாமல் BLO-கள் மீது பணிச்சுமையைத் திணிக்கிறார்கள்." எனவும் அவர் விமர்சித்தார்.
"இன்னும் பல உயிர்களை இழப்பதற்கு முன், தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட்டு, இந்தத் திட்டமிடப்படாத நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
10 நாட்களுக்குள் 2வது சம்பவம்
இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன், அதாவது நவம்பர் 9 அன்று, கிழக்கு பர்த்வானில் உள்ள சக் பலராம்பூர் பகுதியில் பூத் நிலை அதிகாரியாகப் பணியாற்றிய நமிதா ஹன்ஸ்ரா என்ற அங்கன்வாடி ஊழியர், பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் (Cerebral Attack) உயிரிழந்தார்.


