சால்ஜாப்பு செய்யும் திமுக... சூறையாடும் திராவிட கட்சிகள்... இதுதான் அந்த திட்டங்கள் - பட்டியலிட்ட அண்ணாமலை!
முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருப்பதாகவும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், பிரதமர் மோடி குற்றம் சாட்டியது போல, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், திமுக பற்றிய உண்மைகளைத்தான் பிரதமர் மோடி கூறியதாகவும், பாரதப் பிரதமர் நாடு முழுவதும் அறிவித்த திட்டங்கள் பலவற்றை, தங்கள் சுய நலனுக்காக திராவிட கட்சிகள் சூறையாடிக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்றைய தினம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருப்பதாகவும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிவதாகவும், நகைச்சுவை செய்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் அவர்கள், ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும்தானே தவிர, முதலீடு ஈர்க்கிறோம் என்ற பெயரில் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்ல அல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே பயம், நமது பிரதமர் அவர்களுக்கு அல்ல, இத்தனை ஆண்டுகளாக மாண்புமிகு பாரதப் பிரதமர் குறித்துத் திட்டமிட்டுக் கட்டமைத்த தவறான பிம்பம், தமிழக மக்கள் மத்தியில் உடைந்து நொறுங்குவதைக் கண்டு, இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து உளறிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவைப் பற்றியும், திமு கழக அரசைப் பற்றியும் நமது பிரதமர், அவதூறுகளைத் தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக குறித்து பிரதமர் கூறியது அத்தனையும் உண்மை என்பதை, கூட்டத்தில் கலந்து கொண்ட சாமானிய மக்களின் ஆரவாரம் உணர்த்தியது. திமுக பற்றிய உண்மைகளைக் கூறுவது, அவதூறாகத் தெரிந்தால், அது யாருடைய தவறு என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கூட்டங்களில் உரையாற்றும்போது, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, தமிழக மக்களுக்கு திமுக அரசு கொண்டு செல்வதில்லை என்றும், ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வெளிவர அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் முன்பாக, மாநில சுயாட்சி என்ற பெயரில், தமிழகத்துக்கு விரோதமாக, அறுபது ஆண்டுகளாக திமுக நடத்தி வரும் அரசியல் நாடகங்கள் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்திருக்கலாம். அதை விடுத்து, வழக்கமான துண்டுச் சீட்டை சற்று பெரியதாக, ஒரு பக்க அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை என்றால், சம்பந்தமே இல்லாமல் பேசும் சால்ஜாப்பு அரசியல், திமுகவின் அறுபதாண்டு வழக்கம் என்பது அனைவருமே அறிந்த ஒன்று. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இன்றைய அறிக்கை வெளியான நேரமும், அதில், சம்பந்தமே இல்லாமல், பாரதப் பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்திருப்பதும் உணர்த்துவது ஒன்றுதான்.
சில நாட்களுக்கு முன்பாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில், திமுகவின் முதல் குடும்பம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவருக்கும் நெருக்கமான ஜாபர் சாதிக் என்பவர் சிக்கிக்கொண்ட விவகாரம் சர்வதேச அளவில் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கோட்டை விட்ட போதைப் பொருள் கடத்தல் விவகாரம், திமுகவுக்குத் தலைவலியாகியிருக்கிறது. அதனை மடைமாற்ற, அறிக்கை என்ற பெயரில் சிரிப்பு காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து!
பாரதப் பிரதமர் நாடு முழுவதும் அறிவித்த திட்டங்கள் பலவற்றை, தங்கள் சுய நலனுக்காக, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காக தமிழகத்துக்குள் அனுமதிக்காமல், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன திராவிடக் கட்சிகள்.
PM Shri பள்ளிகள் மற்றும் தேசியக் கல்வி கொள்கை
உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாகக் கொடுக்கும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும், PM Shri பள்ளிகளையும் தமிழகத்துக்குள் அனுமதிக்காமல் இருப்பதற்கு திமுக கூறும் காரணம் மும்மொழிக் கொள்கை. ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், நவோதயா பள்ளிகளின் மத்திய கல்வி முறையை, பல லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக் கொடுக்கின்றனர். தாய்மொழியைக் கட்டாயமாக்கி, ஆங்கிலமும், மூன்றாவதாக ஒரு விருப்ப மொழியையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும், தொழிற்கல்வியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும் புதிய தேசியக் கல்வித் திட்டத்தை, தமிழகத்துக்குள் அனுமதிக்காமல் இருப்பது, மாணவர்கள் நலனுக்காக என்றால், அதைத் திமுகவினரே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுகவினரின் உண்மையான நோக்கம், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்பதைத் தவிர, மாணவர்களின் நலன் அல்ல.
தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு முட்டுக்கட்டை
கடந்த 2022 ஆம் ஆண்டு நமது \மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, திமுக அரசு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான மூலப்பொருள்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு சரிவர ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பதால், தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் தாமதமாகின்றன என்று பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டினார். அதன் பிறகு கூட, கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்துவதிலேயே குறியாக இருந்த திமுக, தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான மூலப்பொருள்களை வழங்கவில்லை. இதற்கு முதல்வரிடம் பதில் ஏதும் இருக்கிறதா?
பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கிய நிதியை வீணடித்தல்
தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டிற்காகவும், பட்டியல் சமூகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்விக்கும், விடுதி வசதிகளுக்கும், உதவித் தொகைக்கும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் என, பட்டியல் சமூக மக்கள் நல்வாழ்வுக்காக மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்படும் நிதியை, செலவே செய்யாமல் சுமார் 10,000 கோடி ரூபாயை, திமுக அரசு திருப்பி அனுப்பியது முதலமைச்சருக்கு நினைவில் இருக்கிறதா? பட்டியல் சமூக மாணவர்களுக்கான விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்டவை, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும்போது, அதற்குச் செலவிடாமல், 10,000 கோடி ரூபாய் நிதியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், முதலமைச்சர் பட்டியல் சமூக மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?
ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில், தமிழகத்தில் எத்தனை முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பது செய்திகளாகவே வந்திருக்கின்றன. ஜல்ஜீவன் முறைகேடுகளைக் குறித்துப் புகார் அளித்துக் காணொளி வெளியிட்ட இளைஞரைக் கைது செய்த அவலமும், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியம் கோரிய இளைஞரை லஞ்சம் கொடுக்க வற்புறுத்தி, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும், டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சரின் சொந்த ஊரான திருவாரூரில்தானே நடந்தது. மத்திய அரசு மக்களுக்காக இலவசமாகச் செயல்படுத்தும் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சிதானே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கட்சி.
பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை திசைதிருப்புதல்
கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா அமரர் வாஜ்பாயால் கொண்டு வரப்பட்ட, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக முறையாகச் செயல்படுத்தாமல், கடந்த ஆண்டில் மட்டும், மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் இல்லாமல், மருத்துவ சிகிச்சைக்கும், இறந்தவர்கள் உடல்களையும் டோலியில் கட்டித் தூக்கிச் செல்லும் அவலங்களும் நடந்தது இதே திமுக ஆட்சியில்தானே. இந்த ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் பெயரைப், புதியதாக மாற்றி வைத்து மட்டும் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்?
கடந்த பத்து ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழகக் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நேரடியாக வழங்கிய நிதி 19,936 கோடி ரூபாய். அதில் மீதமிருக்கும் நிதி அனைத்தையும், தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கச் சொல்லி தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு திமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. கிராம வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு வழங்கும் நிதியை, திமுக அரசு வாங்கிக் கொண்டு, கிராமங்களின் சுயசார்பு வளர்ச்சியைத் தடுப்பதோடு, பெயரளவில் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிதியை எந்தத் திட்டங்களுக்கு திமுக செலவிடுகிறது என்பதை முதலமைச்சர் கூற முன்வருவாரா?
போஷான் திட்டத்தில் ஊழல்
இதுபோக, கர்ப்பிணிப் பெண்களுக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் போஷன் திட்டத்தின் அடிப்படையில், தமிழகச் சகோதரிகளுக்கு வழங்கும் ஊட்டச் சத்துப் பெட்டகத்தில் கூட ஊழல் செய்தவர்கள்தானே. தரமற்ற ஊட்டச் சத்துப் பொருள்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் வைப்போம் என்று கூறிவிட்டு, அதே நிறுவங்கங்களுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டதைப் போன்ற ஏமாற்று வேலை வேறெங்கும் நடந்ததுண்டா?
மத்திய அரசு தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு வழங்கும் இத்தனை நலத்திட்டங்களிலும் முறைகேடு செய்து, தடை செய்து, மடைமாற்றி, தாமதப்படுத்தி விட்டு, எந்த தைரியத்தில் மத்திய அரசுத் திட்டங்களின் பட்டியல் கேட்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது வியப்பளிக்கிறது.: இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.