எங்கள் கூட்டணிக்கு வந்தால் எம்பி சீட் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைகோவிடம் பாஜக தெரிவித்துள்ளது.
BJP Offers MP Seat To MDMK Vaiko: இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் வைகோ. மதிமுக பொதுச்செயலாளரான வைகோ போன்று நாடாளுமன்றத்தில் எழுச்சியாக பேசிய தலைவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. வைகோ மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். திமுக அரசால் வைகோ மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யான நிலையில், அவரது பதவிக்காலம் நாளை முடிவடைகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவுரையாற்றிய வைகோ
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவு உரையாற்றிய வைகோ, ''எனது பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது எப்போதும் பாசத்தையும், மரியாதையையும் காட்டிய ஜெகதீப் தன்கருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. என்னை முதன் முதலாக அவைக்கு அனுப்பிய கலைஞர் கருணாநிதி, இப்போது மாநிலங்களவைக்கு அனுப்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி'' என்று தெரிவித்தார்.
ஈழத்தமிழருக்காக தான் 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம்
தொடர்ந்து ஈழத்தமிழருக்காக தான் 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததையும், மறைந்த பிரதமர் வாஜாயிடம் பேசி என்.எல்.சி.யை தனியார் மயமாக்காமல் தடுத்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். எனது குரல் எப்போதும் ஒலிக்கும் என வைகோ தனது உரையை நிறைவு செய்தார்.
நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஆசை காட்டிய பாஜக
இதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்,''"நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் வைகோ தனது அனல் பறக்கும் பேச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கட்சி பாகுபாடின்றி அவர் சமூகநலனுக்காக பாடுபட்டார். நாடாளுமன்றத்தில் அவரது பங்களிப்பு மிகவும் அதிகம்'' என்றார். அப்போது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ''வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம்'' என்று தெரிவித்தார்.
கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பாஜக
நாடாளுமன்றத்திலேயே வைகோவுக்கு எம்.பி சீட் ஆசையை பாஜக காட்டி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாயந்த கட்சிகளை சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
திமுகவை விட்டு வெளியேறுகிறாரா வைகோ?
மதிமுக திமுக கூட்டணியில் உள்ள நிலையில் வைகோவை கடந்த 2019ம் ஆண்டு திமுக மாநிலங்களவை எம்.பி.யாக்கியது. ஆகையால் இந்த முறையும் எம்.பி. சீட்டை திமுக தனக்கு அளிக்கும் என வைகோ எதிபார்த்திருந்த நிலையில், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் அதிருப்தி காரணமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற போவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், மதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க ''உங்களுக்கு எம்.பி. சீட் தருகிறோம். கூட்டணிக்கு வாங்க'' நாடாளுமன்றத்திலேயே பாஜக ஆசைகாட்டியுள்ளது. ஆனால் ''மு.க.ஸ்டாலினை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். கருணாநிதிக்கு நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்'' என வைகோ ஏற்கெனவே வைகோ விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


