பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சையாக பேசிய யூடியூபர் முக்தார் மீது த.மா.கா சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி ஜி.கே.வாசனிடம் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கடிதம் வழங்கியுள்ளார்.
பிரபல யூடியூபர் முக்தார் "மை இந்தியா 24x7" என்ற சேனலில் சில நாட்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். நேர்மையின், எளிமையின் இலக்கணமாக பார்க்கப்படும் பெருந்தலைவர் காமரஜர் குறித்து பேசியதற்காக முக்தாருக்கு காங்கிரஸ் கட்சி, நாடார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
எதிர்ப்பு அலை; மன்னிப்பு கேட்ட முக்தார்
முக்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. மேலும் முக்தாருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன. கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு முக்தார் மன்னிப்பு கேட்டார். ''காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் வைத்த விமர்சனங்கள், பல்வேறு சேனல்களில் பேசிய கருத்துகளை தான் நான் பகிர்ந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்துகள், விமர்சனங்கள் அல்ல. எனது பேச்சில் குறிப்பட்ட சமுக மக்கள் புண்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
ஜி.கே.வாசனிடம் கடிதம் வழங்கிய கரு.நாகராஜன்
இந்த நிலையில், பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்திய முக்தாரை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் டெல்லிக்கு சென்று நேரில் கடிதம் வழங்கியுள்ளார்.
த.மா.கா சார்பில் நடவடிக்கை வேண்டும்
இது தொடர்பாக கரு.நாகராஜன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பெருந்தலைவர் காமராஜர் அவர்களை களங்கப்படுத்தியும், உழைக்கிற சமுதாயத்தை அவமானப்படுத்தியும் யூடியூபில் பேசிய முக்தாரை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்குமாறு மரியாதைக்குரிய ஜி.கே.வாசன் அவர்களிடம் டெல்லியில் கடிதம் கொடுத்து விளக்கினோம்.
அவரும் "அந்த வீடியோவை நானும் பார்த்தேன். இரண்டு வார்த்தைக்கு மேல் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு அக்கிரமமாக இருந்தது. இதை பேசியவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்" என்றும் தெரிவித்தார்'' என கூறியுள்ளார்.


