Annamalai : அண்ணாமலையோடு மோதல்.. பாஜகவில் இருந்து நீக்கம்.!! மீண்டும் சீறிய கல்யாணராமன்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு என கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் உட்கட்சி மோதல்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்றும், வார் ரூமை பயன்படுத்தி பாஜக நிர்வாகிகளை விமர்சிக்கப்படுவதாகவும், அமலாக்கத்துறையில் சிக்கியவர்களிடம் பணம் பறிப்பதாகவும் சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தநிலையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி உட் விவகாரங்களை பொது வெளியில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளிக்கப்பட்டது.
கல்யாணராமன் நீக்கம்
இதனையடுத்து பாஜக மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் திரு.கல்யாணராமன் அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.
இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி திரு.கல்யாணராமன் அவர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலை திமுகவுடன் கூட்டணி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கல்யாணராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆர்எஸ்எஸ் என்ற தாய் அமைப்பின் அரசியல் உருவாக்கம். பாஜக என்பது வெறும் கட்சியல்ல... அது ஒரு சிந்தனையோட்டம், சித்தாந்தம், பாரத அன்னைக்கான சேவை. இன்று என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு. அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி. It is against the principles of natural Justice.
பாஜக மத்திய தலைமையில் புகார்
ஆங்கிலத்தில் "No one can be a judge in his own cause" என்று ஒரு பார்வை உண்டு. இந்த பார்வையை மீறுகிறோம் என்ற அடிப்படை விஷயம் கூட சம்பந்தப்பட்ட நபர்கள் அறியவில்லை என்பது பரிதாபம். இந்த அடிப்படை நீதியை மீறும் செயல் கண்டனத்திற்குரியது. இது குறித்து பாஜக மத்திய தலைமையிடம் எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். மற்றபடி சமூக-தேசிய நலனிற்காக தொடர்ந்து பணியாற்றுவதே மாகாளி-பராசக்தியின் ஆணை. அது தொடரும்...!!! என கல்யாணராமன் பதிவிட்டுள்ளார்.