வெடி குண்டு வைத்து கொலை செய்து விடுவேன்.. முதல்வர் முன் மிரட்டிய பாஜக நிர்வாகி... சிறையில் அடைத்த போலீஸ்
வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகியை சிறையில் அடைத்துள்ளனர்.
முதல்வரை கஞ்சாவோடு சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் உள்ளதால் புதிய திட்டங்களை அறிவிக்கவோ செயல்படுத்தவோ முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தங்களது குடும்பத்தோடு நேற்று கொடைக்கானல் சென்றார். அப்போது மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது பாஜக ஓ பி சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க முற்பட்டார்.
சுற்றி வளைத்த போலீஸ்
அப்போது அவரிடம் கஞ்சா பாக்கெட் இருந்துள்ளது.இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். அப்போது பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் தெரிவிக்க வந்ததாக கூறினார். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்து காவல் துறையினரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது,
மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது
வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என ஆறு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மாதவன் என்ற காவலர் கொடுத்த புகாரின் பெயரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியை காவல்துறையினர் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.