அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்.. வீடியோ காட்சி..
ஈரோடு பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோர பகுதிகளில் சுமார் 200 வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
அதிகளவு உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணை அதிகளவு நீர் திறப்பால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அக்டோபர் மாதத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உயர்வு..
இந்நிலையில் தமிழகத்தில் பவானி, கொள்ளிட்டம், தென்பெண்ணை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவில் 5 வது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஓகேனக்கலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரைப்பகுதிகளான காவேரி நகர், கந்தன் நகர், பசவேஸ்வரர் வீதி, நேதாஜி நகர், கீரக்கார வீதி உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வெள்ள சூழந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்று பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க:காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய கூட்டம்.. நாளையுடன் புரட்டாசி முடிவடைவதால் கூட்டம்..