பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போகிற போக்கில் தமிழ்நாடு மீது அவதூறு பரப்பிய கர்நாடகா பாஜக அமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

பெங்களூரில் தொழுகை நேர பாங்கு ஒலிக்கும்போது அனுமன் பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்ட கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அம்மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் தடுப்பு காவலில் சிறை பிடித்தனர்.

அப்போது பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா, இந்த விவகாரத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பேசினார். அத்துடன், ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து சிலர் எங்கள் கஃபேவில் வெடிகுண்டு வைத்து விட்டு சென்று விட்டனர்.’ என போகிற போக்கில் ஆதாரமின்றி தமிழ்நாடு மீது அவதூறு பரப்பியுள்ளார்.

ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சந்தேகிக்கப்படும் முக்கிய நபரை என்ஐஏ இன்னும் கைது செய்யாத நிலையில், அவரது பிறப்பு குறித்த எந்த விவரங்களும் இல்லாத நிலையில், மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் பொறுப்பற்று கருத்து கூறியுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், பாஜக அமைச்சரின் இந்த கருத்து இரு மாநிலங்களிடையேயான பதற்றத்தை தூண்டும் வகையில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

ஆனால், அந்த நபர் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேசமயம், அந்த நபர் கலபுர்கி நோக்கி பேருந்தில் சென்றதாகவும், அதற்கு முன்பு பெல்லாரியில் அவர் இறங்கியதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கருதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த பயங்கரவாத வழக்கில் தொடர்புடைய சிலரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெல்லாரியை சேர்ந்த ஷபீர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024: 25 வாக்குறுதிகளை முன்னிறுத்தி களமிறங்கும் காங்கிரஸ்!

குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபருடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இவர்களோ அல்லது முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கைது செய்யப்படாத நபரோ தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என எந்தவொரு தகவலையும் போலீசார் வெளியிடாத நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில், கர்நாடகா பாஜக மத்திய அமைச்சர் தமிழ்நாடு மீது அவதூறு பரப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.