மக்களவைத் தேர்தல் 2024: 25 வாக்குறுதிகளை முன்னிறுத்தி களமிறங்கும் காங்கிரஸ்!
மக்களவைத் தேர்தலை விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான 25 வாக்குறுதிகளுடன் சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டு யாத்திரைகளை நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.
இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், பெண்கள், இளைனஞர்கள், தொழிலாளர்கள், அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சிக்கான 25 வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார். குறிப்பாக, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச வருவாய் சட்டம் கொண்டுவரப்படும், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி, சாதிவாரி கணக்கெடுப்பு, . 25 வயதுக்குட்பட்ட டிகிரி, டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும், இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்- அப் நிதி உருவாக்கப்படும், கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும் ஆகிய வாக்குறுதிகளை ராகுல் காந்தியும், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வழங்கியுள்ளனர்.
'ஒன்றுபட்டு நிற்போம்; வென்றுகாட்டியே தீருவோம்': முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் இன்று காலை கூடியது. இந்த கூட்டமானது சுமார் மூன்றரை மணி நேரம் நடந்தது. அதில், மேற்கண்ட 25 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்து ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி முழுமையாக ஆலோசித்ததாகவும், பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் ஐந்து தூண்களான விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்களுக்கான நீதி, பெண்களுக்கான நீதி, தொழிலாளர்களுக்கான நீதி மற்றும் அனைவருக்கும் சமமான நீதி ஆகிய 5 பிரிவுகளில் தலா 5 வாக்குறுதிகள் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
1926 ஆம் ஆண்டிலிருந்தே, காங்கிரஸ் கட்சியின் அறிக்கை, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் ஆவணமாக கருதப்படுவதாக குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே, நாடு மாற்றத்தை விரும்புகிறது; மோடியின் வாக்குறுதிகள் 2004ஆம் ஆண்டில் அவர் அளித்த வாக்குறுதிகள் போன்றே எதுவும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருகும் என சாடினார்.
மக்களவைத் தேர்தலை விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், அனைவருக்குமான நீதி, என்பன உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் அவர்களுக்கான நியாயம் கோரி 25 வாக்குறுதிகளுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.