40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றும் அத்திவரதர் வைபவத்தையொட்டி காஞ்சிபுரம்  அனந்தசரஸ் குளத்திலிருந்து  கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணி  முதல் அத்திவரதர் காட்சி தரத் தொடங்கினார். பக்தர்கள் காலை 5 மணி முதல் தரிசனம் செய்யத்தொடங்கினர்

முதல் 24 நாட்கள் அதாவது ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சிதருவார். அடுத்த 20 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். இன்று முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். 

அத்திவரதவை அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசிக்கலாம். காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்பதால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அதிகாலையிலேயே அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். அவரை இந்து அறலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் அத்திவரதரை தரிசனம் செய்தார்.