இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு.. வாக்கு வேட்டையாடும் வேட்பாளர்கள்- கிடுக்கிப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக வேட்பாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை இறுதி கட்ட தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரம்
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்.? என்கிற மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்குப்பதிவிற்கான இறுதிகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வேட்பாளர்களும் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக களம் இறங்கியுள்ளனர். திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதே போல அன்புமணி தருமபுரியிலும், பிரேமலதா விருதுநகரிலும், அண்ணாமலை கோவையிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
ஓபிஎஸ் அணியினரால் தாக்கப்பட்ட இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர்? அழுகிய பலாப்பழம் கோஷத்தால் பரபரப்பு!
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில், தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறினால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு
தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 17.04.2024 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.