தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கு ஏற்படும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா வெற்றி பெற்ற பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வென்று பீகார் அரசியலையே புரட்டிப் போட்டது.. காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி மோசமாக தோற்றது.

பிரசாந்த் கிஷோரின் கட்சி படுதோல்வி

இதேபோல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோவ்வி அடைந்தது. பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பிரசாந்த் கிஷோர் மிக மோசமான தோல்வியை தழுவிய நிலையில், பாஜகவை எதிர்த்தால் தவெக தலைவர் விஜய்க்கும் இதே நிலை தான் ஏற்படும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''அரசியலில் எதிர்ப்பதை மட்டுமே பார்ப்பதில்லை என்று தவெக தலைவர் விஜய்க்கு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். விஜய்யும், தவெகவும் பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்துள்ளனர். SIR பணிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஆனால் இதை பாஜகவுடன் கனெக்ட் செய்து விஜய் எதிர்க்கிறார். எது செய்தாலும் எதிர்க்கிறார்கள். வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டும் மக்கள் பார்த்து ஓட்டுப்போட மாட்டார்கள்.

மக்கள் இதை விரும்ப மாட்டார்கள்

நீங்கள் என்ன சொல்லப் போறீங்க? என்ன செய்யப் போறீங்க? என்பதையே மக்கள் பார்ப்பார்கள். ராகுல் காந்தி பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்து தான் தண்டனையை அனுபவிக்கிறார். 95 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். விஜய்யும் எதிர்க்கும் மனநிலையில் தான் இருக்கிறேன் என்று சொன்னால் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

பிரசாந்த் கிஷோர் நிலை தான் விஜய்க்கும்

பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி 3.55% வாக்குகள் தான் வாங்கினார். 238 தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிரசாந்த் கிஷோர் நல்லவரோ, கெட்டவரோ, நடுநிலைவாதியோ மக்கள் மாற்றம் தேவையில்லை என்றால் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆகவே கட்சி ஆரம்பித்து விட்டேன் என்பதற்காக பாஜகவை எதிர்த்தால் அது சரியாக இருக்காது. தவறு செய்தால் சொல்லலாம். ஆனால் தவறே செய்யாமல் பாஜகவை தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன'' என்று தெரிவித்துள்ளார்.