சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது? என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ''பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும், ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அடிப்படை நோக்கமே சிதைவு 

இவற்றை அமைக்க, மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.

ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வயதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது. 

பாமக வாக்கு வங்கி அதிகரித்து கொண்டே செல்கிறது.! சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி உறுதி- ராமதாஸ் நம்பிக்கை

திமுக செய்திருப்பது என்ன?

டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். 

ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. 

ரூ.1,050 கோடி எங்கே சென்றது?

கடந்த 2008 ஆம் ஆண்டு, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள், B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு. 

தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது?

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்''என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

திருவண்ணாமலை கோவில் தலைமை குருக்களை ஒருமையில் பேசி அவமரியாதை! கொந்தளிக்கும் பாஜக!