திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். கல்வி கடன் ரத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி, முதல் பட்டதாரி வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென விமர்சித்தார். கல்வி கடன் ரத்து செய்யப்படும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும், முதல்பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும், சமையல் எரிவாயு உருளைக்கு நூறு ரூபாய் வழங்கப்படும், சட்டபேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் திமுக கொடுத்துததில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். 

சாதிவாரி கணக்கெடுப்பு

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியதை வெள்ளை அறிக்கையாக திமுக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்பதை தெலுங்கானா அரசு நிரூபித்துள்ளதாக கூறிய அவர், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு கூறுவதை நிறுத்திவிட்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதிய கல்விக்கொள்கையின் அங்கமான மும்மொழி கொள்கையை நடமுறைப்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக மத்திய அரசு மாநில அரசுக்கு 2152 கோடி ரூபாய் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

தமிழகத்திற்கு கல்வி நிதி உதவி

நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தும் மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை குஜராஜ், பீகாருக்கு பகிர்ந்து அளித்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். தமிழகத்தின் நிதியை பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கியிருந்தால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் அவ்வாறு தொடர்ந்தால் தான் தமிழகத்தின் உரிமையை பெற முடியும் என கூறினார்.

பாமகவின் வாக்கு வங்கி

இந்த விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்யாமல் தன் நிலைபாட்டினை மாற்றி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 39 ஆயிரத்து 393 காலியாக உள்ள களப்பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காவலர்களுக்கு கால அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெரியார் எல்லா மக்களுக்கும் சுயமரியாதையோடு வாழுங்கள் சிந்தியுங்கள் என சுயமரியாதை கருத்துகளை கூறி விட்டு சென்றிருக்கிறார். அவரை பற்றி இழிவாக யார் பேசினாலும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் தவெகவிற்கு 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகித வாக்குகள் உள்ளதாக பிரசாந்த் கிஷேர் தெரிவித்துள்ளது தொடர்பானகேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் பாமக வாக்கு வங்கி அதிகரித்து கொண்டே செல்கிறது எனவும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெறும் என கூறினார்.