காங்கிரசும் ஆம் ஆத்மியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை.! டெல்லியில் பாஜகவிற்கு ஆதரவாக களம் இறங்கிய அண்ணாமலை
தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு தலைவர் பேசாததை பேசியதாக திரித்து வெளியிட்டு வருவதாக தெரிவித்த அண்ணாமலை, இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி பயத்தை காட்டுவதாக கூறினார். எனவே தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.
டெல்லியில் அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்ததாக டெல்லியில் களம் இறங்கிய அவர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். டெல்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
டெல்லியில் 7 தொகுதிகளிலும் இம்முறை பா.ஜ.க வெற்றி பெற்று வர வேண்டும். மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. அவரது மகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழக மீனவர் பிரச்சினைகளை தமிழகத்தில் வந்திருந்து தங்கி தீர்த்தவர் சுஸ்மா ஸ்வராஜ் என குறிப்பிட்டார்.
தமிழுக்கு முக்கியத்துவம்
13ம் தேதி அடுத்த கட்ட தேர்தல் முடிந்த பிறகு தமிழக பா.ஜ.க தலைவர் அனைவரும் டெல்லியில் வந்து பிரச்சாரம் செய்வார்கள் என தெரிவித்தார். திருவள்ளுவரை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை காசி தமிழ் சங்கமும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமும் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஊழலும் ஆம் ஆத்மியும்
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி, இன்று ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கலால் கொள்கை ஊழலில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். நாட்டை சுத்தம் செய்கிறோம் என்று கூறி 6000 கோடி ஊழல் செய்துள்ளனர். சுயநிதி குழுக்களுக்கு ஒரு லட்சம் போலி கணக்குகளை உருவாக்கி ஊழல். ஆம் ஆத்மி ஊழலுக்கு இலக்கணமாக இருக்கக்கூடிய ஆட்சியாக இருக்கிறது என விமர்சித்தார்.
ஆம் ஆத்மியும், காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளுடன் டெல்லியில் தேர்தல் களத்திற்கு வந்துள்ளனர் என விமர்சித்தார். ஒரு தலைவர் பேசாததை பேசியதாக திரித்து வெளியிட்டு வருவதாக தெரிவித்த அண்ணாமலை, இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி பயத்தை காட்டுவதாக கூறினார். எனவே தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.