பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வது நாகரீகமற்றது என்று கூறியதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோ தங்கராஜ்
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பெண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளிக்கையில்: நாம் இன்று பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். கோயில் திருவிழாக்களில் அதிகமான மக்கள் கூடுவது, விளையாட்டு நிகழ்வுகளை அதிகளவில் பார்க்கச் செல்வது இதெல்லாம் நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக பார்க்க முடிவதில்லை. ஆனால், கோயில் திருவிழாவில் அதிகளவில் மக்கள் கூடுவது நல்ல அடையாளம் இல்லை என்று மனோ தங்கராஜ் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?
கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது. எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?
பகுத்தறிவு பேசுகிறாராம்
இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா? தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
