Asianet News TamilAsianet News Tamil

தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின... பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கனும்- அன்புமணி

தொடர் மழையால், பயிர்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை  ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 
 

Anbumani requested immediate action to save crops submerged in rain water KAK
Author
First Published Nov 15, 2023, 1:42 PM IST | Last Updated Nov 15, 2023, 1:42 PM IST

நீரில் மூழ்கிய பயிர்கள்

கன மழையின் காரணமாக பயிர்கள் நீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் சில பகுதிகளில் சாதகமான பயன்களும், பெரும்பான்மையான பகுதிகளில் பாதகமான விளைவுகளும்  ஏற்பட்டிருக்கின்றன.

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்  பெய்து வரும் மழையால் அங்கு பயிரிடப்பட்டுள்ள  சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு  தேவையான தண்ணீர் கிடைத்திருப்பதாக உழவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ஆனால்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது.

Anbumani requested immediate action to save crops submerged in rain water KAK

அழுகும் நிலையில் பயிர்கள்

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து  வருகிறது. நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அங்கு  17 செ.மீ மழை பெய்திருந்தது. இன்று காலை 8 மணி வரை 12 செ.மீ மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் 20 ஆயிரத்திற்கும்  கூடுதலான ஏக்கர்  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழைநீர் அகற்றப்படாவிட்டால், பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

Anbumani requested immediate action to save crops submerged in rain water KAK

விவசாயிகளுக்கு இழப்பீடு

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில்  தோல்வியடைந்தது. அதனால், உழவர்கள்  பெரும் இழப்புக்கு ஆளாகினர். இப்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால்  உழவர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. சம்பா பயிரும் கைவிட்டால் உழவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். காவிரி பாசன மாவட்டங்களில் வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.  தொடர் மழையால், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை  ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

Anbumani requested immediate action to save crops submerged in rain water KAK

என்எல்சி நிர்வாகத்திற்கு கண்டனம்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதன் இரண்டாவது சுரங்கத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பத்துக்கும் மேற்பட்ட இராட்சத குழாய்களைக் கொண்டு வெளியேற்றி வருகிறது.  அதனால், கீழ்வளையமாதேவி,  உய்யகொண்டான், சேப்பளாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும்  மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த  நெற்பயிர்கள்  நீரில் மூழ்கியுள்ளன. என்.எல்.சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதற்காக என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதுடன்,  உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும்  என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து  பெற்றுத் தர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்.. பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்- கோரிக்கை விடுக்கும் இபிஎஸ்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios