சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியம் 2000 ரூபாய் போதாது...10 ஆயிரமாக உயர்த்திடுக! - அன்புமணி
40 ஆண்டுகள் வரை பணி செய்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்குவது அவர்களின் சேவையை கொச்சைப்படுத்துவதாகும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சத்துணவு அமைப்பாளர்கள் ஓய்வூதியம்
சத்துணவு அமைப்பாளர் ஓய்வூதியம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 40 ஆண்டுகள் வரை பணி செய்த அமைப்பாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்குவது அவர்களின் சேவையை கொச்சைப்படுத்துவதாகும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று நான் சென்றிருந்தேன். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த ஒரு கூட்டத்தில், பூ.நாகராஜன் என்ற மாற்றுத்திறனாளி பெரியவர் என்னை சந்திப்பதற்காக காத்திருந்தார். அதையறிந்த நான், அவரை நேரில் அழைத்து விசாரித்த போது கிடைத்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
2 ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியுமா.?
பெரியவர் நாகராஜன், 37 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இப்போது ஓய்வு பெற்றுள்ள அவருக்கு ஓய்வூதியமாக ரூ.2000 மட்டும் தான் வழங்கப்படுகிறது. ‘‘ நான் 60 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளி. பல நோய்களுக்கு மருத்துவம் பெற வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு வழங்கும் 2000 ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச் செலவுகளை கவனிப்பேனா?
மருத்துவச் செலவுகளை சமாளிப்பேனா? அல்லது பிற கடமைகளை நிறைவேற்றுவேனா?’’ என்று கேட்டார். அவரது வினாவுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2000 ஓய்வூதியம் போதுமானதல்ல... அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பல முறை வலியுறுத்தியிருக்கிறேன்.
ஆனால், மாற்றுத் திறனாளி முதியவர் ஒருவர், என்னை நேருக்கு நேராக சந்தித்து, தனது நெருக்கடிகளையெல்லாம் கூறி, அதற்கான தீர்வு என்ன? என்று கேட்ட போது, அவருக்கு பதில் கூற முடியவில்லை. உங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
சத்துணவுத் திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது, சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மிகக்குறைந்த தொகுப்பூதியம் தான் வழங்கப்பட்டது. அதன்பின் சத்துணவுப் பணியாளர்கள் பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதன் பயனாக, அமைப்பாளர்களுக்கு ரூ.7,700 - ரூ.24,200, சமையலர்களுக்கு ரூ.4,100 - 12,500, சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3,000 -9000 என்ற அளவில் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
10ஆயிரமாக உயர்த்த வேண்டும்
தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை அதிகம் என்று கூறவில்லை. இந்தத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், 40 ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை தான் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? என்பது தான் பாமகவின் வினா என அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்