கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக கட்சி தற்போது இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த மோதலுக்கு முழுக்க முழுக்க ஜிகே மணி தான் காரணம். அவர் தான் எங்களைப் பிரித்துவிட்டார் என்று அன்புமணி வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.
ஆனால் அன்புமணியின் குற்றச்சாட்டை முன்னிலுமாக மறுத்த ஜிகே மணி அன்புமணிக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்த போது அதனை ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரையும் மீறி அன்புமணி மத்திய அமைச்சராவதற்கு நான் தான் உறுதுணையாக இருந்தேன். மேலவை உறுப்பினராக எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் அன்புமணிக்காக விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவர் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தமாக இருக்கிறது.
தந்தையும், மகனும் அமர்ந்து பேசினாலே பிரச்சினை தீர்ந்துவிடும். இருவரும் இணைந்து செயல்படத் தயாராக இருந்தால் நானும், எனது மகனும் கட்சியில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கிறோம். பாமக ஒன்றுமையாக செயல்பட்டால் போதும் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டு கடந்த 18ம் தேதி அன்புமணி தரப்பில் இருந்து ஜிகே மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உரிய அவகாசம் வழங்கப்பட்டும் அதில் மணி விளக்கம் கொடுக்காத காரணத்தால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜகே மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
முன்னதாக கட்சியின் 35 ஆண்டு காலம் தலைவராக பொறுப்பு வகித்த ஜிகே மணி, அன்புமணியின் வருகைக்காக தனது பொறுப்பை விட்டுக் கொடுத்தார். பின்னர் மணி கட்சியின் கௌரவத் தலைவராக்கப்பட்டு ராமதாஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


