அன்பமணி மத்திய அமைச்சராவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். ஆனால் நான் தான் ஐயாவிடம் பேசி அவரை மத்திய அமைச்சராக்கினேன். ஆனால் தந்தை, மகன் இடையே நான் தான் பிரச்சினையை ஏற்படுத்தினேன் என சொல்வது வேதனை அளிப்பதாக ஜிகே மணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதலுக்கு கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி தான் காரணம் என அன்புமணி தரப்பு குற்றம் சாட்டி வந்த நிலையில், இது தொடர்பாக ஜிகே மணி விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பாமக தொடக்க காலத்தில் பல்வேறு போராட்டம் நடத்தி, தடியடி பட்டு, ரத்தம் சிந்தி, சிறை சென்று கட்சியை வளர்த்தவர் ராமதாஸ். அவருடன் சுமார் 41 ஆண்டுகாலம் நான் பயணித்துள்ளேன். நானும் பல சிறைகளை சந்தித்துள்ளேன். அப்படி பாடுபட்டு வளர்க்கப்பட்ட கட்சிக்கு ஒரு பிரச்சினை என்றால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? இந்த பிரச்சினை ஐயாவால் வந்ததா..? எல்லா பிரச்சினைக்கும் காரணமே அன்புமணி தான். வீட்டில் அமர்ந்து பேசவேண்டியதை பொது வெளியில் பேசத் தொடங்கியதே பிரச்சினைக்கு காரணம்.
அன்புமணிக்கு துரோகம் நினைத்ததில்லை
கட்சியின் நிலையைக் கண்டு ஐயா கண்ணீர் வடிக்கிறார். ஆனால் அதனை விமர்சிக்கும் அன்புமணி, எங்கள் அப்பா குழந்தை மனநிலைக்கு வந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். அவருடன் இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார் என சொல்கிறார். மேலும் ஜிகே மணி தான் என்னையும், அப்பாவையும் பிரித்துவிட்டதாக சொல்கிறார். அன்புமணி பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்புமணிக்கு மனதளவில் துரோகம் நினைக்காதவன் நான்.
கூட்டணிக்காக பேச்சவார்த்தை
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த போது நான் தான் பிற கட்சி தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேசி, ஐயாவுடன் கலந்து கொண்டு கூட்டணியை முடிவு செய்வேன். அந்த வகையில் கலைஞருடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பேச்சுவாத்தை நத்தினேன். அப்போது 6 தொகுதிகளை நாங்கள் கோர முடிவு செய்தோம். அந்த வகையில் நானும் கலைஞரிடம் 6 தொகுதிகள் கோரினேன். 6 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 மேலவை உறுப்பினர் பொறுப்பு வழங்குவதாக கலைஞர் தெரிவித்தார். மேலும் மேலவைக்கு நீங்கள் தான் செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.
அன்புமணியை முன்மொழிந்தேன்
நான் மறுப்பு தெரிவித்த போதிலும் உங்களைப் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் மேலவைக்கு செல்ல வேண்டும். ஐயா வைகோவும் அந்த வகையில் தான் சென்றுள்ளார் என வற்புறுத்தினார். இது தொடர்பாக நான் ஐயா ராமதாஸிடம் சொன்ன போது, நீங்கள் ஏன் மேலவை உறுப்பினருக்கு ஒப்புக்கொண்டீர்கள்? யாரை அனுப்புவது என கேள்வி எழுந்தது. நான் தான் அன்புமணியின் பெயரை முன்மொழிந்தேன். ஆனால் அதற்கு ஐயா மறுப்பு தெரிவித்தார். பின்னர் அவரை வற்புறுத்தி நான் தான் அன்பமணியை மேலவை உறுப்பினராக்கினேன். அப்படிப்பட்ட என்னை அவர் குற்றம் சாட்டுகிறார்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு பெற்று கொடுத்தது நான் தான்..!
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமாக இருந்தது நான் தான். இது ஐயாவுக்கும் தெரியும். இது தொடர்பாக புத்தகமாக வெளியிட ஐயா கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இந்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியானதும் அன்புமணி அமர்ந்துகொண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுவது போல் அவரது மகள் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டனர். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தார்கள். ஆனால் என்னை பார்த்து 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்தானது காரணம் நான் தான் என அன்புமணி சொல்கிறார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


