தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க 1703 ஏக்கர் நிலங்களை பறிப்பதா? கைவிடாவிட்டால்.. மாபெரும் போராட்டம் - அன்புமணி

ஓர் ஏக்கர் நிலத்தில் ஓராண்டுக்கு ரூ.10 லட்சம்  வரை வருவாய் ஈட்டித் தரும் நிலங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.15 லட்சம் விலை வழங்குவதென்பது உழவர்களையும், அவர்களின் உடமைகளையும் சுரண்டும் செயலாகும் என அன்புமணி விமர்சித்துள்ளார்.

Anbumani has condemned the grabbing of 1703 acres of land from farmers to build a knowledge city in Tamil Nadu KAK

அறிவு நகரம்- நிலங்கள் அபகரிப்பு

சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க  1146 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட மொத்தம் 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு  செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும்; அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின்  கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றது. ஆனால், இந்தத் திட்டத்தை அரசு நிலங்களில் செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னைக்கு அருகில் விளைநிலங்களில் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. 

Anbumani has condemned the grabbing of 1703 acres of land from farmers to build a knowledge city in Tamil Nadu KAK

நிலங்கள் பறிக்க முயல்வதை நியாயப்படுத்த முடியாது

அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள  கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களிலிருந்து 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் அரசு புறம்போக்கு நிலங்கள் 556 ஏக்கர் தவிர மீதமுள்ள 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றை உழவர்களிடமிருந்து பறிக்க முயல்வதை நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்திருப்பவை. மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடியவை. அந்த நிலங்கள் தான் பல்லாயிரம் உழவர்களுக்கும், உழவுத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. தங்களின் கவுரவமான வாழ்க்கைக்கு வகை செய்யும் நிலங்களை உழவர்கள் கடவுளாக பார்க்கின்றனர். 

Anbumani has condemned the grabbing of 1703 acres of land from farmers to build a knowledge city in Tamil Nadu KAK

தமிழ்நாடு அறிவு நகரம் - எதிர்க்கவில்லை

அந்த நிலத்தை பறிக்க  அரசு முயல்வதை உழவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அதுவும் கையகப்படுத்தப்படவுள்ள 1146  ஏக்கர் நிலங்களுக்கு விலையாக ரூ.174.52 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓர் ஏக்கருக்கு சராசரியாக ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கப்படும். ஓர் ஏக்கர் நிலத்தில் ஓராண்டுக்கு ரூ.10 லட்சம்  வரை வருவாய் ஈட்டித் தரும் நிலங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.15 லட்சம் விலை வழங்குவதென்பது உழவர்களையும், அவர்களின் உடமைகளையும் சுரண்டும் செயலாகும். இதற்கு அரசு துணை போகக் கூடாது. தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையோ, அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையோ பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், வேளாண் விளைநிலங்களை அழித்து விட்டு தான் அவற்றை அமைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

தமிழக அரசு நினைத்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள அரசு நிலங்களில் அறிவு நகரத்தை அமைக்கலாம். கொங்கு மண்டலத்திலும் இத்தகைய அறிவு நகரத்தை அமைக்கும் அளவுக்கு நிலங்கள் உள்ளன. சேலத்தில் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு தமிழ்நாடு அறிவு நகரத்தை அமைக்கவும் தடையில்லை. இவ்வளவு வாய்ப்புகளையும் ஒதுக்கிவிட்டு, சென்னைக்கு அருகில் வேளாண்  விளைநிலங்களை கையகப்படுத்தி தான் அறிவு நகரம் அமைக்கப்படும் என அரசு கூறுவதை ஏற்க முடியாது.

Anbumani has condemned the grabbing of 1703 acres of land from farmers to build a knowledge city in Tamil Nadu KAK
மாபெரும் போராட்டம்- எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய ஊர்களில் 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும்  திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்பகுதிகளில் ஒரு கைப்பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தக் கூடாது. அதற்கு மாறாக, நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயன்றால், அதை எதிர்த்தும், கண்டித்தும் பல்லாயிரக்கணக்கான உழவர்களைத் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுக வார்டு உறுப்பினர்களை தாக்கிய திமுகவினர்.. கைது செய்யவில்லையென்றால் போராட்டம்- எச்சரிக்கும் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios