அதிமுக வார்டு உறுப்பினர்களை தாக்கிய திமுகவினர்.. கைது செய்யவில்லையென்றால் போராட்டம்- எச்சரிக்கும் இபிஎஸ்

மேட்டுப்பாளையம் நகர மன்றக் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகநகர மன்ற வார்டு உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

EPS condemns DMK members for attacking AIADMK councilors in Mettupalayam KAK

அதிமுக-திமுக மோதல்

மேட்டுப்பாளையத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் 31.10.2023 அன்று கூடியது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர், பொறியாளர் என்று நகராட்சியின் முக்கிய அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.

எனவே, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய அதிகாரிகள் இல்லாமல் இவ்வளவு அவசரமாக நகர மன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும்; கூட்டத்தில் வைக்கக்கூடிய தீர்மானங்கள் ஏதும் இதுவரை வழங்கப்படாத நிலையில், வேறு ஒரு நாளில் நகர மன்றக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றும், அதிமுகவை சேர்ந்த 8 நகர மன்ற உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பை, நகர மன்றத் தலைவர் திருமதி மகரிபா பர்வீன் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

EPS condemns DMK members for attacking AIADMK councilors in Mettupalayam KAK

உள்ளிருப்பு போராட்டம்

அந்த சமயத்தில், திமுக நகர மன்றத் தலைவரின் கணவர் திரு. அஷ்ரப் அலி அவர்களுடைய ஏற்பாட்டில் திமுக-வைச் சேர்ந்த நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், கழக வார்டு உறுப்பினர்கள் மீது நாற்காலியை எடுத்துப் போட்டு தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியும், நீங்கள் உள்ளே அமர்ந்திருந்தால் உங்களைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். குறிப்பாக, 17-ஆவது வார்டு உறுப்பினர் ரவி மற்றும் 15-ஆவது வார்டு உறுப்பினர் ஸ்ரீராம் ஆகிய இரண்டு திமுக உறுப்பினர்களும், நாற்காலிகளால் கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

மேலும், நகர மன்ற அவசரக் கூட்டத்தின் தொடக்கத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலையில், திடீரென்று திமுக நகர மன்றத் தலைவர் ‘தீர்மானங்கள் ஆல் பாஸ்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். கழக நகர மன்ற உறுப்பினர்கள் மீது நாற்காலிகளை வீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தியதோடு, கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிய திமுக நகர மன்ற உறுப்பினர்கள், குறிப்பாக, திமுக வார்டு உறுப்பினர்களான ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடமும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS condemns DMK members for attacking AIADMK councilors in Mettupalayam KAK

அதிமுகவினர் கைது

திமுக நகர மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக கழக வார்டு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததைக் கண்டித்து 31.10.2023 முதல் நகர மன்றத்தில், 8 கழக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று (2.11.2023) உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களையும், இவர்களை பார்வையிடச் சென்ற முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.A.K. செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R.G. அருண்குமார், M.L.A., உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.

போராட்டம் நடத்தப்படும்- இபிஎஸ் எச்சரிக்கை

தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்களைக் கைது செய்யாமல், தாக்குதலுக்குள்ளான 8 கழக நகர மன்ற உறுப்பினர்களையும், அவர்களை பார்வையிடச் சென்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் கைது செய்த, விடியா திமுக-வின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசை எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள், எம்.பிகளை குறிவைக்கும் IT, ED.!இதுவரை சோதனையில் சிக்கியது என்ன.? வெளியான தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios