தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 அதிகாரிகள் நியமனத்தில் ழூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டையே உலுக்கும் வகையிலான இந்த வேலைவாய்ப்பு ஊழல் குறித்த விவரங்களை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. கையூட்டின் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த இந்த உண்மைகள் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், கையூட்டு வாங்குவதற்காக திட்டமிட்டே இந்த ஆள்தேர்வு முறை வடிவமைக்கப்பட்டது என்பதை 2023&ஆம் ஆண்டிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருந்தது.
‘‘உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!’’ என்ற தலைப்பில் 16.11.2023&ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,‘‘தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சட்டமும் கடந்த 2021 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?’’ என்று வினா எழுப்பப்பட்டிருந்தது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகிவிட்டது.
இதேபிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 8&ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘தமிழ்நாட்டில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை. அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது’’ என்று கூறியிருந்தேன். அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது. அரசு ஊழியர்கள் நியமனத்தில் திமுக அரசு திட்டமிட்டு ஊழல் செய்திருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.
ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இன்னும் 50 ஆயிரம் பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களிலும் கூட ரூ.35 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள்.
தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
