தூய்மைப் பணியார்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ஹிட்லர் ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி என காட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதவில், “சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரியும் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அதேபோல், சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது திமுக அரசு மீண்டும், மீண்டும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் குறித்து ஆயிரம் முறை விளக்கியிருக்கிறேன். அவர்களி்ன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏராளமான முறை வலியுறுத்தியுள்ளேன். இடை நிலை ஆசிரியர்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டில் இரண்டாம் நாளாக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 150 நாள்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு துப்பில்லாத திமுக அரசு அடக்குமுறைகளையே பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறது.
திமுகவினரிடையே ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரம் முறை மு.க.ஸ்டாலின் கூறியிருப்பார். ஆனால், சென்னை மாநகராட்சி, மதுரை மாநகராட்சி உள்பட திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. கனிமக் கொள்ளை ஊழல், அதிகாரிகள் நியமன ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல், கட்டிட அனுமதி ஊழல், போக்குவரத்து ஒப்பந்த ஊழல், குப்பை அள்ளும் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் என கிட்டத்தட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சில ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறையே ஆதாரங்களை அனுப்பியுள்ளது.
அவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பதற்கு திறனும், துணிச்சலும் இல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த பலமும் இல்லாத அடித்தட்டு மக்களான தூய்மைப் பணியாளர்களிடமும், இடைநிலை ஆசிரியர்களிடமும் மட்டுமே தமது வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது சர்வாதிகாரம் நீதிக்கு எதிராக மட்டும் தான் பாயும் போலத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 13 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றி படுதோல்வி அடைந்த அரசு திமுக அரசு தான். ஊழல்வாதிகளை உலவ விட்டு, அடித்தட்டு மக்களுக்கு எதிராக மட்டும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி இந்த முறை மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி” என காட்டமாக தெரிவித்துள்ளார்.


