தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 'கற்றலுக்கு முடிவே கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் தனக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறியுள்ளார். 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் அன்பில் மகேஷ். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர் முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். பள்ளிக்கல்வித்துறையில் தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் முதல்வரின் பாராட்டுகளையும், மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

முனைவர் பட்டம் பெற்றார் அன்பில் மகேஷ்

இந்த நிலையில் அன்பில் மகேஷ் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning ல் தனது ஆய்வை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ்.

கற்றலுக்கு முடிவே கிடையாது

இது தொடர்பாக அன்பில் மகேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்!

முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்

அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

குவியும் வாழ்த்து

முனைவர் பட்டம் பெற்ற அன்பில் மகேஷ்க்கு பள்ளிக்கல்வித்துறை வாழ்த்து தெரிவித்துள்ளது. இதே போல் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு முனைவர் பட்டம் பெறும் இரண்டாவது அமைச்சர் அன்பில் மகேஷ் அவார். இதற்கு முன்பு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முனைவர் பட்டம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.