- Home
- Tamil Nadu News
- சட்டமன்ற தேர்தலால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து 5 ஆம் ஆண்டியில் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.
கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சும் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கி 3வது வாரம் முடிவடையும். இதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும்.
இந்த சூழலில் தேர்தல் வாக்கு பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதே போல தேர்தல் பிரச்சாரத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதும் பாதிக்கப்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதியை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி பொதுத்தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், நவம்பர் 4ஆம் தேதி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.