சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மதிப்பூதியம் அடிப்படையில் தன்னார்வ சட்டப்பணியாளராக பணிபுரிய விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Chennai District Legal Services Authority recruitment : சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவில் மதிப்பூதியம் அடிப்படையில் தன்னார்வ சட்டப்பணியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி மற்றும் தலைவர்/ முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு தன்னார்வ சட்டப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
சென்னையில் வேலை வாய்ப்பு
தன்னார்வ சட்டப்பணியாளராக சேவை புரிய விருப்பமுள்ள சென்னை வருவாய் மாவட்டத்தில் குடியிருக்கும். 1.ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட), 2.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், 3.சமூகப் பணியில் முதுநிலைக் கல்வி (M.S.W.) பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள். 4.அங்கன்வாடி பணியாளர்கள், 5.மருத்துவர்கள் உடல்நல நிபுணர்கள். 6.மாணவர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் (அவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் வரை), 7.அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்கப் பிரமுகர்கள், 8. மகளிர் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள், 9.மாவட்ட / வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உளநிறைவிற்கேற்ப தகுதியுடைய சேவை மனப்பான்மை உள்ள ஏனைய நபர்கள் போன்ற பிரிவுகளில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தினமும் 750 ரூபாய் சம்பளம்
மேற்படி தன்னார்வ சட்டப்பணியாளருக்கான கடமை சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல. மேலும் இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை, சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டுமே நாளொன்றுக்கு ரூ.750/- மிகாமல் அளிக்கப்படும்.
மேற்கூறிய வகைகளின் கீழ் வருபவர்களில் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகின்ற 31.10.2025 மாலை 5.00 மணிக்குள் தலைவர் / முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வடக்கு கோட்டை சாலை, ADR கட்டிடம், சென்னை 600 104. என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு தபால் வழியாகவோ சேர்ப்பிக்க வேண்டும். தபால் தாமதம் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட நீதிமன்றத்தின் https://chennai.dcourts.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும், நேர்காணல் தேதி, இடம் மற்றும் இதர விபரங்களை விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள சென்னை மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு தபால், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
