இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே திமுக அலுவகம் முன்பு 85 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை!!
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது விவசாயி ஒருவர், இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை அடுத்த தாழையூரில் உள்ள திமுக அலுவலகம் முன்பு திமுக முன்னாள் விவசாய சங்க அமைப்பாளர் தங்கவேல் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தார். காலை 11 மணியளவில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தி.மு.க.வின் தீவிர உறுப்பினரான தங்கவேல், கல்வியில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தங்கவேல் ஒரு பேனரில், "மோடி அரசே, மத்திய அரசே, எங்களுக்கு இந்தி வேண்டாம். எங்களது தாய்மொழி தமிழ், இந்தி கோமாளிகளின் மொழி. இந்தி மொழியை திணிப்பது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.
தமிழகத்தின் மீது இந்தி திணிக்கப்பட்டால், பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து தேசிய தலைநகரில் அக்கட்சி திமுக போராட்டம் நடத்தும் என தமிழக ஆளும் திமுகவின் இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும், மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்தால் வாய்மூடி மவுனமாக இருக்க மாட்டோம் என்றும் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருந்தது. இதையடுத்து போராட்டம் வெடித்தது. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.