8 மாத குழந்தைக்கு சளி பாதிப்பிற்காக வீட்டிலேயே கைவைத்தியம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Home Remedy Baby Death : காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளால் குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்படும் போது வீட்டில் பாட்டிக்கள் கை வைத்தியமாக மருந்து கொடுப்பார்கள். இதனால் எப்படிபட்ட நோயும் பறந்து போய்விடும். அந்த அளவிற்கு பாட்டி வைத்தியம் கைதேர்ந்தது. ஆனால் உரிய வகையில் மருத்தவர்களிடம் ஆலோசனை பெறாமல் வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தினால் பாதிப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் 8 மாத குழந்தைக்கு சளி பாதிப்பிற்காக மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே கைவைத்தியம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சளியால் பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு சிகிச்சை
சென்னை அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணாபுரம், வல்லவன் நகர் பகுதி சேர்ந்த தேவநாதன் என்பவரின் 8 மாத பெண் குழந்தைக்கு சளி பிரச்சனை அதிகமாக இருந்ததால் கடந்த 13ஆம் தேதி மாலை தைலத்தோடு கற்பூரத்தை குழைத்து மூக்கில் தேய்த்துள்ளனர். இதனையடுத்து சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குழந்தை உயிரிழப்பிற்கு காரணம் என்ன.?
அந்த குழந்தைக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த நிலையில் சளி பிரச்சனையால் உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்ததா? அல்லது சளி பிரச்சனைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை சேர்த்து மூக்கில் தடவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிர் இழந்ததா? என விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக உடற்கூராய்வில் தான் முடிவு தெரியவரும் என அபிராமபுரம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
