சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட பலர் மாரடைப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

புதுமண தம்பதி

சென்னை மந்தைவெளி எஸ்.பி.ஐ. குடியிருப்பில் வசித்து வந்தவர் மெல்வின்(29). இவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி இருசக்கர வாகனத்தில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள மெரினா மாலுக்கு சென்று படம் பார்த்திருந்தனர்.

மனைவி அலறி கூச்சல்

அப்போது மெல்வினுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறி கூச்சலிட்டுள்ளார். பின்னர் தியேட்டரில் இருந்தவர்கள் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மெல்வின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட காயத்ரி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மெல்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.