- Home
- உடல்நலம்
- Sleeping Position : தவறான தூங்கும் முறைகளால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Sleeping Position : தவறான தூங்கும் முறைகளால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தவறான தூங்கும் முறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Wrong Sleeping Position in Tamil
பொதுவாக நாம் தூங்கும் நிலைகள் பல வகைப்படும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்காமல் இருந்தால் உடலுக்கு பல பின் விளைவுகள் ஏற்படலாம். தவறான தூங்கும் முறைகளில் முதன்மையானது குப்புறப் படுத்தல். இது பொதுவான மற்றும் தவறான தூங்கும் நிலையாகும். இந்த நிலையில் தூங்கும் பொழுது கழுத்தை ஒரு பக்கமாக திருப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கும். இதனால் கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் தேவையற்ற அழுத்தம் ஏற்படலாம். முதுகுத்தண்டின் வளைவுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு ஏற்படலாம்.
தவறான தூக்க முறைகள்
தலையணை இல்லாமல் தூங்கும் பொழுது கழுத்துக்கும், முதுகுத்தண்டுக்கும் இடையே சரியான ஆதரவு இருக்காது. இது கழுத்து வலி மற்றும் தலைவலிக்கு வழி வகுக்கலாம். காலை ஒரு பக்கமாக மடித்து தூங்கும் பொழுது உடலின் எடை சமமாக பகிரப்படாது. இதன் காரணமாக முதுகுத்தண்டில் அதிக அழுத்தம் ஏற்படலாம். தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம். மிக உயரமான தலையணை வைத்து தூங்குவது தோள்பட்டை வலியை ஏற்படுத்தலாம். மிகத் தட்டையான தலையணையை வைத்திருப்பது போதுமான ஆதரவை வழங்காமல் கழுத்து வலியை அதிகரிக்கலாம். மிகவும் மென்மையான அல்லது மிகவும் கடினமான மெத்தையில் படுத்து உறங்குபவர்களுக்கு முதுகுத்தண்டில் அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படலாம்.
தவறான முறையில் தூங்குபவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள்
தவறான முறையில் தூங்குபவர்களுக்கு ஏற்படும் பொதுவான பின்விளைவு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு வலியாகும். இது நாளடைவில் நடப்பதில் சிரமம், உட்காருவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தவறான முறையில் தூங்குவதால் உடலின் எடை சமமாக பரவாமல் தோள்பட்டை, இடுப்பு, முழங்கால் ஆகிய இடங்களிலும் வலி ஏற்படலாம். வலி அல்லது சங்கடமான நிலை காரணமாக ஆழ்ந்த உறக்கம் தடைபடலாம். இதன் காரணமாக நாள்முழுவதும் சோர்வு மற்றும் தூக்கமின்மை அதிகரிக்கும். குப்புற படுத்து தூங்குபவர்களுக்கு சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் குறட்டை பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் அசைவுகள் குறைவதால் தசை வலிகள் அதிகமாகலாம். சில நேரங்களில் நரம்புகள் அழுத்தப்பட்டு மரத்துப்போதல் அல்லது ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படலாம்.
சரியான தூங்கும் முறை எது?
பெரும்பாலான மருத்துவர்கள் மல்லாந்து படுப்பதை அறிவுறுத்துகின்றனர். இது முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை பாதுகாக்கிறது. சிறிய தலையணையை பயன்படுத்துவது நல்லது. கால்களை நேராக வைத்து கால்களுக்கு இடையில் சிறிய தலையணையை வைத்து ஒரு பக்கமாக படுத்தல் சரியான முறையாகும். இது இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தூங்கும் முறைகளுடன் சரியான தலையணை மற்றும் மெத்தையையும் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இவற்றுடன் தூங்கும் நிலைகளையும் மாற்றினால் தொடர்ச்சியான கழுத்து வலி, முதுகு வலி ஆகியவை குறையும். உங்களுக்கு முதுகுத்தண்டில் ஏதேனும் வலி, முதுகில் வலி, இடுப்பு தோள்பட்டையில் தொடர்ச்சியாக வலி இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தூக்க நிலையை மாற்றுங்கள்
உங்கள் தூக்க நிலைகளை மாற்ற முயற்சி செய்யும்பொழுது ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். ஆனால் தூக்க நிலையால் ஏற்படும் பின்விளைவுகளை யோசித்து நீங்கள் தூக்க நிலைகளை மாற்ற முயற்சிக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், உங்கள் கழுத்து மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு தூக்க நிலைகள் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.