சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மக்களவையில் இதற்குக் கண்டனம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது வாக்கு வங்கி அரசியல் என்றும் குற்றம் சாட்டினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தை (Impeachment Motion) எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருப்பது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதற்கு முன் நடந்ததில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம், தர்காவுக்கு அருகே உள்ள தீபத்தூண் மீது தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதற்காக நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்துள்ளன.

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்

மக்களவையில் பேசிய அமித் ஷா, எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“அவர்கள் ஒரு வழக்கில் தோற்றால், நீதிபதியைக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் ஒரு தேர்தலில் தோற்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் (EVM) குறை கூறுகிறார்கள். இப்போது EVM புகார்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பதால், வாக்குத் திருட்டுப் புகார்களைக் கொண்டு வந்துள்ளனர்” என்றார்.

மேலும், “ஒரு நீதிபதி, அவர் வழங்கிய ஒரு தீர்ப்பிற்காகப் பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்கொள்வது, சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் ஒருபோதும் நடந்ததில்லை. அவர்கள் (எதிர்க்கட்சிகள்) தங்கள் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். நாட்டு மக்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

தீர்மானம் அளித்த தலைவர்கள்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உட்பட 120-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானத்தை மக்களவை சபாநாயகரிடம் வழங்கினர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.