திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயன்றபோது திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் 144 உத்தரவை ரத்து செய்த நீதிபதி சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி மீண்டும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் தீர்மானத்திற்கான நோட்டீசை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கினர். முன்னதாக 120க்கும் அதிகமான உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. தீர்மானம் வெற்றி பெற நாடாளுமன்றத்தில் 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.