செங்கோட்டையனுடன் நாங்கள் 1996 வரை கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். 2019-ல் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் செய்த சில வேலைகள் காரணமாக நான் அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் திமுகவில் சுற்றுச்சூழல் பிரிவில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘1972 முதல் அரசியலில் 53 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக எனது தந்தை காளியப்பன் செயல்பட்டு வந்தார் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இரண்டரை கோடி தொண்டர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது தவெகவில் ஐக்கியமாகி அங்கிருந்து பல குற்றச்சாட்டுகளை எடப்பாடியார் மீது செங்கோட்டையன் கூறி வருகிறார். அவை அனைத்தும் தவறானவை.

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக எங்கள் குடும்பம் இருந்து வந்திருக்கிறது. நாங்கள் இல்லாவிட்டால் 2016 தேர்தலில் எங்கள் சித்தப்பா செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். 2006 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். நாங்களும் தொண்டர்களும் உழைத்ததாலேயே கோபிச்செட்டிபாளையத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதைக் கைவிட வேண்டும்.

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் மிக அதிகமாக இருக்கிறது. திமுக தொண்டர்களுக்காககூட ஒரு காரியத்தை திமுக மாவட்டச் செயலாளரால் நிறைவேற்றி கொடுக்க முடியவில்லை. கோபாலபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள சி.எல்.ஜெயின் மேத்தா கல்லூரி மற்றும் ஓ.எம்.ஆரில் உள்ள சிஷ்யா பள்ளிக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வளைத்துப்போட முதல்வர் குடும்பத்தினரின் பெயரையும், முதல்வரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். திமுக ஆட்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. எனவே வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் குள்ளம்பாளையம் கிராமம், கோபி தொகுதியைச் சேர்ந்த மக்கள் எங்கள் மாவட்ட பொறுப்பு செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் இன்றைய தினம் வருங்கால முதல்வருடன் இணைந்திருக்கிறோம்’’ என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு ஈரோட்டில் அதிமுகவுக்கு பாதிப்பு என்கிறார்கள். உண்மையான நிலவரம் என்ன? எனக் கேட்டதற்கு, ‘‘2026 தேர்தலில் யாரை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும் அவரே அங்கு வெற்றி பெறுவார்’’ எனக் கூறினார்.

நீங்கள் ஏன் திமுகவுக்கு போனீர்கள். இப்போது அங்கிருந்து ஏன் விலகுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘‘நான் பிறந்ததில் இருந்து அதிமுக குடும்பத்தில் வளர்ந்தவன். செங்கோட்டையனுடன் நாங்கள் 1996 வரை கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். 2019-ல் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் செய்த சில வேலைகள் காரணமாக நான் அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். மீண்டும் அவர் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டு தவெகவுக்கு சென்றதை எங்கள் குடும்ப உறுப்பினர்களாலும், கோபி தொகுதி மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நாங்கள் மீண்டும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேர்ந்திருக்கிறோம்.

அவருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்படேன் என்பதே உண்மை. மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளோம். எனக்கு தெரிந்து கோபியில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செங்கோட்டையனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் 5,000 பேருக்கு மேற்பட்டவர்கள் செங்கோட்டையனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.