கொடநாடு கொலை வழக்கு.! குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை- சிபிசிஐடி ஷாக்
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் ஆஜராகதது சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொடநாடு கொள்ளை சம்பவம்
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மறைந்தார். இதனையடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அதிமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ்- சசிகலா- எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் என 4 பிளவாக அதிமுக பிளவுபட்டது. இதற்கிடையே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில் 2017ஆம் ஆண்டு மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முற்பட்டனர். அதனை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
கொள்ளை அடிக்க தூண்டியது யார்.?
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தை தூண்டியது யார்.? எதற்காக கொடுநாடு பங்களாவில் கொள்ளை அடிக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை தனிப்படை போலீசார் நடத்தி வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகள் ஆஜராகவில்லை
இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது கொடாநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தின் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜரானார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.