பெரம்பலூரில் நவ.8இல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வருகிற 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கிராமங்களில் குவாரிகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் டெண்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த டெண்டர் கோரி அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது, பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வன், தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் உள்ளிட்ட 3 பேர் தங்களது விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது அவர்களிடம் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் வாக்குவாதம் செய்து தாக்கி விண்ணப்பத்தை கிழித்து வீசியதாக தெரிகிறது.
மேலும், அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன், அரசு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவின் உடல்நலப் பிரச்சினைகள் இதுதான்!
தொடர்ந்து, கல்குவாரி டெண்டர் விவகாரத்தில் அரசு ஊழியர்களை தாக்கிய புகாரில் திமுக நிர்வாகிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர், எம்.எல்.ஏவின் உதவியாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வருகிற 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதல் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு சம்பவங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது போதாதென்று, ஆங்காங்கே தி.மு.க.வினர் பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். திமுகவினரின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 8ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.