தமிழக சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் அதிமுக உறுப்பினர்கள் கிட்னி ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் சட்டமன்றத்திற்கு வந்து கவனம் ஈர்த்தனர்.

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது நாள் கூட்டத்தில் கரூர் அசம்பாவித சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி சார்பில் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கீடு செய்தது ஏன், ஒரே நாளில் அனைவருக்கும் பிரேதபரிசோதனை செய்தது ஏன், அவசர அவசரமாக விசாரணை ஆணையம் அமைத்தது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். பகல் 12 மணிக்கு தவெக தலைவர் பிரசாரத்திற்கு வந்துவிடுவார் என்று தெரிவித்துவிட்டு மாலை 7 மணிக்கு வந்ததே அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இன்றைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டையில் கிட்னி ஜாக்கிரதை என்ற வாசகத்தை ஸ்டிக்கராக ஒட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பிரபல தனியார் மருத்துவமனையில் ஏழைகளிடம் பொய்சொல்லி அவர்களது கிட்னி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக அதிமுக உறுப்பினர்கள் கிட்னி ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் வந்து கவனம் ஈர்த்தனர்.