2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் அரசியல் கட்சிகளில் வேகமெடுத்து வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனு பெறும் நிகழ்வு இன்று (டிசம்பர் 23) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு தொகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜெ.விஜய் பாஸ்கர், காரைக்குடி தொகுதிக்கு எழுவங்கோட்டை செந்தில் சுப்பையா, பட்டுக்கோட்டைக்கு துரை செந்தில், ஆலங்குளம் மற்றும் தி.நகர் தொகுதிகளுக்கு ஜெமிலா, திருத்தணிக்கு சிவசங்கரி ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

மேலும், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்கு கே.எம்.எஸ். சிவகுமார், பொன்னேரி மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளுக்கு முன்னாள் எம்.பி. வேணுகோபால், ஈரோடு மேற்கு, கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் ஆகியோரும் விருப்ப மனு வழங்கினர்.

இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த விருப்ப மனுவை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியை சேர்ந்த ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 22) அளித்துள்ளார்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.15,000 வீதம், 120 தொகுதிகளுக்கு மொத்தம் ரூ.18,00,000 செலுத்தி, ஐபிஎஸ் பெயரில் இந்த விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் தாமே போட்டியிடவும் ஜி.வி. கஜேந்திரன் தனியாக விருப்ப மனு அளித்துள்ளார். இதனிடையே, “234 தொகுதிகள் இருக்கும் நிலையில் ஏன் 120 தொகுதிகளுக்கு மட்டும் ஐபிஎஸ் பெயரில் விருப்ப மனு?” என்ற கேள்வியும் எழுந்தது. 

இதற்கு கஜேந்திரன் தரப்பினர், தமிழகத்தில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 117 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அரசியல் நம்பிக்கையுடன், அதைவிட அதிகமான 120 தொகுதிகளில் ஐபிஎஸ் பெயரில் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளது விளக்கம் அளித்துள்ளனர். இந்த செயலானது அதிமுகவினர் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.