அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றைத் தலைமையை உறுதிப்படுத்தும் வகையில், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சில நிர்வாகிகளை நீக்கி வருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றைத் தலைமையை உறுதிப்படுத்தும் வகையில், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சில நிர்வாகிகளை நீக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் சீனியரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தியதாலும், தேவர் ஜெயந்தி நிகழ்வில் ஓபிஎஸ், தினகரன் உடன் ஒரே காரில் சென்று கூட்டாகபத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது ஆதரவாளர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட 13-14 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு, ‘‘ அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளரும், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதியுமான எல்.சீனி காதர்மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.பக்கர்,

மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹமீது அப்துல்ரகுமான் மரைக்காயர் ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சுமார் 15-20% வரை உள்ளது. அவர்கள் தேர்தல்களில் முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளனர். பலகாலமாக, அதிமுகவுக்கு ராமநாதபுரத்தில் இஸ்லாமிய வாக்குகள் கணிசமான அளவில் கைகொடுத்து வருகின்றன. இந்த சமுதாயத்தினர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருண்ட்தே இஸ்லாமியர்கள் அதிமுகவை ஆதரித்து வருகின்றனர். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா வெற்றி பெற்றார். அப்போது அதிமுகவுடன்பாஜக கூட்டணி அமைத்திருந்த போதும் இஸ்லாமிய வாக்குகள் பிரியவில்லை.

2019-2023 வரை பாஜகவுடனான கூட்டணி காரணமாக இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிலிருந்து விலகத் தொடங்கின: 2019ல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த வேட்பாளர் நவாஸ் கனி வென்றார். 2024ல் அதிமுக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து இஸ்லாமிய வாக்குகளை மீட்க முயன்றது. ஆனால், திமுக கூட்டணி மீண்டும் வென்றது.

தற்போது, அதிமுகவில் ராமநாதபுரத்தின் முக்கிய இஸ்லாமிய முகமாக இருந்த அன்வர் ராஜா கட்சியை விட்டு பிரிந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.