அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16.2 லட்சம் மோசடி செய்ததாகவும், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அதிமுக பிரமுகர் பணமோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே  நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக மே 29ம் தேதி பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிரடி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், T.பிரசாத் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்)

கட்சியில் இருந்து நீக்கம்

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.