கும்மிடிப்பூண்டியில் இபிஎஸ் பிரசாரம் செய்தபோது மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இபிஎஸ் பிரசாரம்
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இபிஎஸ் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இபிஎஸ் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ரமணா, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், இபிஎஸ் பாதுகாவலர்கள் ஆகியோர் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
மயங்கி விழுந்த சிறுணியம் பலராமன்
இபிஎஸ் திமுக அரசை தாக்கி தீவிரமாக பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்ற சிறுணியம் பலராமன் திடீரென மயங்கி வாகனத்திலேயே விழுந்தார். இதைப்பார்த்ததும் முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பதறிப்போனார்கள். ஆனால் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தது தெரியாமல் இபிஎஸ் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
உடல் நலம் தேறி இபிஎஸ்க்கு வீர வாள் பரிசளித்தார்
தொடர்ந்து சிறுணியம் பலராமனை இபிஎஸ் பாதுகாவலர்களும், ரமணாவும் மீட்டு பிரசார வாகனத்தின் உள்ளே அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு உடல்நலம் தேறிய சிறுணியம் பலராமன் இபிஎஸ்க்கு வீர வாள் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இபிஎஸ் பிரசார கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்தது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


