டாஸ்மாக் வழக்கில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மது நிறுவனங்களில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில், டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்கி திமுக அரசு 24,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.

மாதம் 450 கோடி ரூபாய் திமுகவுக்கு செல்கிறது

''டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகம் கொடுத்தால் தான் மதுபாட்டில் கொடுக்கிறார்கள். நாள் ஒன்று ஒன்றரை கோடி மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று சொல்லும்போது ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு வருகிறது. ஒருநாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து திமுக மேலிடத்துக்கு செல்கிறது. மாசத்துக்கு 450 கோடி ரூபாய், வருஷத்துக்கு 5,500 கோடி ரூபாய் திமுக மேலிடத்துக்கு செல்கிறது'' என இபிஎஸ் கூறியிருந்தார்.

சிறை செல்ல சில காலமே உள்ளது

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் சிறை செல்வார்கள் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவை சத்யன், ''டாஸ்மாக்கில் பல ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட அனைவரும் புழல் ஜெயிலுக்கு செல்ல இன்னும் சிறிது காலமே உள்ளது.

விளம்பர மாடல் அரசு

உண்மை வெட்டவெளிச்சமாகியுள்ளதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அதிமுக மீது விஷயத்தை கக்குகின்றனர். முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தகுதியற்றவர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டாலினின் நடிப்பில் விளம்பர மாடலாகத்தான் திகழ்ந்து வருகிறது.

அரசு நிர்வாகம் தோல்வி

திமுக அரசும், அரசு நிர்வாகமும் மொத்தமாக தோல்வியடைந்து தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளனர். ஊழலுக்காக முதல்வர் ஸ்டாலினும், திமுகவின் அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி'' என்று தெரிவித்துள்ளார்.