மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சுமார் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. அன்படி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேமுதிக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், பிரேமலதா விஜயகாந்தின் இல்லத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்வு தொடர்பாக விசாரித்து ஆறுதல் கூறினேன். கூட்டணி தொடர்பாக நான் எதையும் சொல்ல முடியாது. அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார். அரசியல் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசவில்லை. நான் மனிதாபிமான அடிப்படையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று விளக்கம் அளித்தார்.

ஏற்கனவே தேமுதிகவுக்கு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பொறுப்பு வழங்குவதாக அதிமுக வாக்குறுதி அளித்திருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.