- Home
- Politics
- TVK-வை இன்னும் நம்பும் இபிஎஸ்..! விடாமல் துரத்தும் அதிமுக..! ஆர்.பி.உதயகுமார் கூறும் கூட்டணி கணக்கு..!
TVK-வை இன்னும் நம்பும் இபிஎஸ்..! விடாமல் துரத்தும் அதிமுக..! ஆர்.பி.உதயகுமார் கூறும் கூட்டணி கணக்கு..!
கூட்டணி அமைவதற்கு களப்பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதை எல்லாம் ஊடகங்களிலே நாம் வெளிச்சம் போட்டு விவாதிக்க முடியாது. ஆகவே நீங்கள் ஜனவரி மாதம் வரை நீங்கள் பொறுத்திருங்கள்

நாமக்கல், குமாரபாளையத்தில் அதிமுகவின் பரப்பரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துகொண்டு இருந்தபோது திடீரென்று தவெக கொடிகள் பறந்ததால் உற்சாகமான அவர் பார்த்தீங்களா? கொடி பறக்குதா? பிள்ளையார் சுழி போட்டாச்சு என உற்சாகமாகப்பேசினார். அதன்பிறகு தவெக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது என்கிற ரீதியில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களும் உற்சாகமாகி விட்டனர்.
இவை எல்லாவற்றுக்கும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விஜய் தலைமையில் கூட்டணி, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமான அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி என கட்சியின் சீனியர்கள் விஜயை அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென சுதாரித்துக் கொண்ட அதிமுக, இன்னும் வாய்ப்பிருக்கிறது. விஜயை விமர்சித்து அதை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என பொறுமை காக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘2019 நாடாளுமன்ற தேர்தலிலே தேர்தலுக்கு ஒரு மாதம் இரண்டு மாதத்திற்கு முன்புதான் கூட்டணியை இறுதி செய்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பிறகுதான் அதிமுக களம் கண்டது. அதேபோன்று 2021 சட்டமன்ற தேர்தலில் குறுகிய கால அவகாசத்தில் தான் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு அதிமுக களம் கண்டது. நீங்கள் எல்லோரும் அதை நன்றாக அறிவீர்கள்.
நாங்கள் 75 பேர்கள் அதிமுக கூட்டணியிலே வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இன்றைக்கு மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி அவருடைய தலைமையிலே அதேபோன்று நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் ஓரிரண்டு மாதங்களுக்கு முன்புதான் பொதுச்செயலாளர் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து தேர்தலில் அதிமுக களம் கண்டது. இப்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் ஜனவரி மாதத்தில் தான் கூட்டணியை தலைவர்கள் இறுதி செய்வார்கள். அதற்குள்ளாக அரைவேக்காடு அண்ணன் டிடிவி.தினகரன் அவசர அவசரமாக ஏமாந்து விட்டீர்கள். அப்படி போய்விட்டது. இப்படி போய்விட்டது என்று தனக்குத்தானே அவர் திருப்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
கொள்கை என்னவென்றே தெரியாத ஒரு கட்சிக்கு ஒரு தலைவர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். ஆகவே அதிமுக கூட்டணியை பற்றி செயல்பாடுகளை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதில் என்ன பிரச்சனை என்றால் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் சம்மன் இல்லாமல் ஆஜராக இந்த தலைவர் நிச்சயமாக ஒரு அரசியல் மரபுகளுக்கும், இலக்கணத்திற்கும் உரியவராக, ஒரு இலக்கணத்தோடு செயல்படுகிற ஒரு அரசியல்வாதிகளுக்கு அழகல்ல.
இப்போது 2026ல் ஜனவரியில் நல்ல முடிவு எடுப்பார் எடப்பாடி பழனிசாமி. மெகா கூட்டணி அமைப்பார். நிரந்தர பொதுச் செயலாளர் அவருடைய தலைமையில் தான் கடந்த மூன்று தேர்தல்களில் அவருடைய வழிகாட்டுதலோடு, அவருடைய தலைமையோடு தான் அவருடைய அறிவுரையோடு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணி அமைவதற்கு களப்பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதை எல்லாம் ஊடகங்களிலே நாம் வெளிச்சம் போட்டு விவாதிக்க முடியாது. ஆகவே நீங்கள் ஜனவரி மாதம் வரை நீங்கள் பொறுத்திருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.