சென்னை-சேலம் 8 வழிசாலையை எதிர்த்து சென்னையில் வரும் 21ம்தேதி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக விளைநிலங்கள், குடியிருப்புகள் அளவீடு செய்து கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் மீண்டும் விவசாய நிலத்தில் உள்ள மரங்களை கணக்கெடுத்து குறியீடு பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வாழ்க விவசாயிகள் இயக்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த தலைவர்கள், செங்கம் அடுத்த கட்டமடு, அத்திப்பாடி கிராமத்தில், 8 வழிச்சாலை எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து 8 வழிச்சாலை அமைக்க உள்ளது. இதற்கு மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு எதிர்ப்போம். கோர்ட் மூலம் வெற்றி காண்போம். மேலும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் வரும் 21ம்தேதி சென்னையில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.