அதிமுக எந்த தலைவனை நம்பியும் இல்லை; தொண்டர்களை நம்பியே உள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். 

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே இபிஎஸ்க்கு எதிராக கிளம்பிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக எகிறிய மூத்த தலைவர் செங்கோட்டையனும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்

ஓபிஎஸ், டிடிவியுடன் கைகோர்த்த செங்கோட்டையன், 'இபிஎஸ்ஸை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்' என்று பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சபதம் விடுத்தார். இதனால் கோபம் அடைந்த இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். தன்னை கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சசிகலா, டிடிவி தினகரன் கண்டனம்

செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியதற்கு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்த செங்கோட்டையனை நீக்கியது கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்றும் இது கொல்லிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு சமம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக எந்த தலைவனை நம்பியும் இல்லை

இந்த நிலையில், அதிமுக எந்த தலைவனை நம்பியும் இல்லை; தொண்டர்களை நம்பியே உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சி நிகழ்வில் பங்கேற்ற அவர் பேசுகையில், ''அதிமுக என்பது தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள் நிறைந்த இயக்கம். தலைவர்களை நம்பியுள்ள இயக்கம் அல்ல. இன்னைக்கு தலைவன் வருவான். நாளை தலைவன் போவான்.

தொண்டர்களை நம்பி அதிமுக

இன்று நான் மேலே இருப்பேன். நாளை கீழே இருப்பேன். இதை நம்பி அதிமுக இல்லை. கீழே இருக்கும் தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. கோபாலபுரம் குடும்பத்தை நம்பி இருக்கும் திமுகவை போன்று அதிமுக இல்லை. எந்த தலைவன் வந்தால் என்ன, எந்த தலைவன் போனால் என்ன யாரை நம்பியும் இருக்காமல் தொண்டர்களை நம்பியுள்ள அதிமுக நீண்டகாலம் நிலைத்து நிற்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். உறுதியேற்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.