- Home
- Tamil Nadu News
- தவெகவுடன் அதிமுக கூட்டணியா? பிள்ளையார் சுழி போட்டது ஏன்? உண்மையை உடைத்து பேசிய இபிஎஸ்!
தவெகவுடன் அதிமுக கூட்டணியா? பிள்ளையார் சுழி போட்டது ஏன்? உண்மையை உடைத்து பேசிய இபிஎஸ்!
தவெகவுடன் அதிமுக கூட்டணியா? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். பிள்ளையார் சுழி போட்டாச்சு என தான் பேசியது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட இபிஎஸ்
கரூர் கூட்ட நெரிசல் சம்பத்துக்கு பிறகு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஆனால் பாஜகவும், அதிமுகவும் விஜய்க்கு ஆதரவாக நின்றன. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தை சிறப்பாக கையாண்டார்.
இபிஎஸ் மீது தவெகவினரின் கரிசனம்
தவெகவுக்கு சில அறிவுரைகளை வழங்கிய அவர் காவல்துறை சரியாக பாதுகாப்பு வழங்காததே கரூர் கூட நெரிசலுக்கு காரணம் என திமுக அரசை குற்றம்சாட்டினார். இதானல் இபிஎஸ் மீது தவெக தொண்டர்களுக்கு கரிசனம் கூடியது. சமூக வலைத்தளங்களில் இபிஎஸ்ஸை புகழந்து தள்ளிய அவர்கள் அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் தவெக கொடியுடன் சென்றனர்.
பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி
மேலும் விஜய் இபிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் ஒருசில தவெக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், 'வலிமையான கூட்டணி அமைய உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தவெக கொடியை பார்த்து இபிஎஸ் சொன்னது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனால் அதிமுக, தவெக கூட்டணி உறுதியானது என பலரும் கருத்து கூறி வந்தனர்.
தவெக திட்டவட்டமாக மறுப்பு
ஆனால் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக விஜய்யோ, தவெகவின் மற்ற தலைவர்களோ கருத்துகள் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ''ஒரு மாதத்துக்கு முன்பு (கரூர் சம்பத்துக்கு முன்பு) தவெக எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ, அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார். அதாவது அதிமுக, தவெக கூட்டணி இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
கூட்டணி குறித்து பேசவில்லை
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை கப்பலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க போகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக இதுவரை தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தவெகவும் எங்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. ஊடகங்கள் தான் இதுகுறித்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.'' என்று தெரிவித்தார்.
பிள்ளையார் சுழி குறித்து விளக்கம்
மேலும் அதிமுக கூட்டத்தில் இருந்த தவெக கொடியை பார்த்து 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தான் பேசியது குறித்து விளக்கம அளித்த இபிஎஸ், ''அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் அக்கட்சி தொண்டர்கள் இருந்தனர். அவர்கள் ஆரவாரமாக இருக்கின்றனர்.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எழுச்சி பெறுவோம். தொண்டர்கள் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டனர் என்று சொன்னேன். ஆனால் அதை நீங்கள் பெரிதாக பேசி விட்டீர்கள். கூட்டணி குறித்து அந்த கட்சி தலைமை தானே முடிவு எடுக்கும்'' என்று கூறினார்.