அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். கோவை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை தொகுதியில் வெற்றி பெற்றவரும் ஆவார்.
ADMK MLA Amul Kandasami : அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வயது 59, உடல்நிலை பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அமுல் கந்தசாமி கோவை மாவட்டத்தில் உள்ள அண்ணூரைச் சேர்ந்தவர். அதிமுகவில் பல்வேறு உள்ளூர் பதவிகளில் பணியாற்றியும் உள்ளார். முன்னதாக, 2020 இல் கோவை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
யார் இந்த அமுல் கந்தசாமி
2021 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளரைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 2 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமுல் கந்தசாமி மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.க. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
